கேரள மாநிலம் கொடுங்கல்லூரில் 18 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், போலீசார் மீது அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டதுடன், காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட மனவேதனையில் தனது மகன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தந்தை நௌஷாத் தெரிவித்துள்ளார்.
முகமது அஸ்லாம் என்ற அந்த இளைஞர், ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது இரு மகன்களையும் போலீசார் அழைத்துச் சென்றதாக நௌஷாத் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணை மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தைப் பறித்ததாகத் தனது மகன்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் அஸ்லாம் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், தனது தம்பி தாக்கப்படுவதைப் பார்த்த அவரது அண்ணன், தம்பியைக் காப்பாற்றுவதற்காகக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகவும் நௌஷாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட்ட ஆய்வாளர் பைஜு மற்றும் உதவி ஆய்வாளர் அதுல் மோகன் ஆகியோர் தனது மகன்களை மூன்று நாட்கள் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து சித்ரவதை செய்ததாக நௌஷாத் குற்றம்சாட்டியுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகே தனது இளைய மகனையும் மூத்த மகனையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, செப்டம்பர் 29-ம் தேதி அஸ்லாம் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 4-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 6-ம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கிட்ட நிலையில் அஸ்லாமின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மகனின் மரணம் தொடர்பாக இதுவரை போலீசார் தங்களிடம் வந்து வாக்குமூலம் பெறவில்லை என்றும் நௌஷாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அவரது மூத்த மகன் சஹல் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
காவல் நிலையத்தில் தனது மகன்கள் தாக்கப்பட்டதாகவும், அதுவே அஸ்லாமின் மரணத்துக்குக் காரணம் என்றும் தந்தை குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Also Read: ஆட்டோ கட்டணம் உயருமா?.. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!



