பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், திராணி, தெம்பு வேண்டும். இந்த அரசு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் எதற்கும் அனுமதி தருவதில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டுமா? நான் எதற்கு அச்சப்பட மாட்டேன். பத்து முறை தேர்தலில் நின்றுள்ளேன். என்னிடம் உங்கள் பாச்சா பலிக்காது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவில் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பகல் கனவு காண்கிறார். ஸ்டாலின் கூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். மக்கள்தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் எத்தனை கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது.
இந்த தொகுதியின் அமைச்சர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி பத்து ரூபாய் அமைச்சர். இவர் பத்து பிரசென்ட் அமைச்சர். எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது. கஷ்டத்தில் சொத்துகளை விற்பவர்களை கமிஷன் என்ற பெயரில் மேலும் கஷ்டப்படுத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் 582 பத்திரப் பதிவு அலுவலங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் ஒரு சார் பதிவாளரை ஓர் ஆண்டுக்கு மேல் பணிபுரியவிடுவதில்லை. இடமாறுதல் செய்து அந்த வகையில் பெரிய தொகை வசூலிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் தோண்டி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சாலைகள் அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்கெனவே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அந்த தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ஜெர்மனியில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்கு ஏன் ஜெர்மனிக்கு போக வேண்டும். இங்கு வைத்தே ஒப்பந்தம் போட்டிருக்கலாமே. ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் புதிதாக போட்டுள்ளனர். ஸ்டாலின் சொந்த வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதில் ஏதோ தில்லு முல்லு உள்ளது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.