தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இத்துடன் முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார். இதனால் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான விருப்ப மனு இன்றுமுதல் 3 நாட்கள் விநியோகிக்கப்படும். போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் 10ம் தேதிக்குள் விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



