திமுகவின் உள்கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்:
புதிய அமைப்பில் பொதுவாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகம் அமைக்கப்படுகிறது. சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகமாக உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
16-வது அமைப்புத் தேர்தலுக்கு தயாராகும் திமுக:
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாக சீரமைப்பு தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 15 முறை அமைப்புரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 16-வது கழக அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் பரிந்துரை:
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களில், தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழக பிரதிநிதி முன்னிலையில் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் வட்ட அளவிலான கட்சி அமைப்புகளை புதிய மாவட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மறுசீரமைப்புக் குழு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் புதிய கட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக மாற்றங்கள் மூலம் கட்சியின் அமைப்பை தொகுதி அளவில் மேலும் சீரமைத்து, அடுத்தகட்ட அரசியல் மற்றும் அமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



