மன்னார்குடியை அடுத்துள்ள ஏத்தகுடி காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (78) இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள் 5 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், அதில் ஒரு மகள் வீட்டில் லட்சுமி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக மூதாட்டி லட்சுமி சென்றுள்ளார்.
ஆனால் இரவு லட்சுமி வீடு திரும்பாததால் அவருடைய மகள் மற்றும் உறவினர்கள் பல பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த நாள் மாலை வயல்வெளி பகுதியில் மூதாட்டி லட்சுமி காயங்களுடன் பிணமாக கிடந்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த தலையாமங்கலம் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளுக்காக மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு நகை பறித்து சென்றிருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது மூதாட்டி அணிந்திருந்த நகை அனைத்தும் கவரிங் என்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர். மூதாட்டியின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு கைலி கிடந்திருக்கிறது. அந்த கைலி ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மது போதையில் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (20) என்பவர் அணிந்திருந்த கைலி என்பது தெரியவந்துள்ளது.
ஆகவே உடனடியாக கணபதியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், நிகழ்ச்சி முடிந்தவுடன் வயல்வெளியில் வீட்டிற்கு திரும்பியபோது மூதாட்டி தனியாக வந்ததாகவும், அவர் அணிந்திருந்தது தங்க நகைகள் என்று நினைத்து நகைகளை பறித்ததாகவும், அவை கவரிங் என்று தெரிந்தவுடன் மதுபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் அந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மூதாட்டியை வயலில் தள்ளி சேற்றில் புதைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டதாக காவல்துறையினரிடம் கணபதி தெரிவித்திருக்கிறார். ஆகவே அவரை கைது செய்து கொலை வழக்கு மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.