உடன் டியூஷன் படிக்கும் மாணவர்களுடன் சுற்றுலா சென்ற 15 வயது சிறுவனுக்கு, பாலியல் வன்புணர்வு நடந்துள்ளது. இந்தக் கொடுஞ்செயலை செய்த அந்த சிறுவனது நண்பர்கள், இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 27, 2023 அன்று, தான் படிக்கும் டியூஷன் சென்டரில் உள்ள நண்பர்களுடன், 15 வயது சிறுவன் கேரளாவில் உள்ள மறையூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அங்கு தனியாக ரிசார்ட் எடுத்து தங்கியுள்ளனர். டியூஷன் சென்டர் உரிமையாளரின் 20 வயது மகனும் உடன் சென்றதாகவும் தெரிகிறது. உரிமையாளரின் மகன் உட்பட 4 நண்பர்கள் சேர்ந்து அந்த சிறுவனை மது அருந்த வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவிலும் அவரை ஈடுபடுத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். நடந்த இந்த சம்பவங்களை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பயத்தில் உறைந்த அந்த சிறுவன் இந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஒரு வாலிபர், சம்பவத்தன்று எடுத்த வீடியோவை காட்டி அந்த சிறுவனை மிரட்டியுள்ளார். இதனால் கடக்காவூர் காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்டது. மறையூர் காவல் நிலையத்திற்கு இந்த புகார் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.