வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு Allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
வரும் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.. இது தான் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்ய கடைசி முழு பட்ஜெட் ஆகும்.. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள், சலுகைகள், மாற்றங்கள் வரும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. குறிப்பாக வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பில் நடுத்தர மக்கள் உள்ளனர் ..
இந்நிலையில் வீட்டில் இருந்து பணிபுரியும் ( Work From Home ) ஊழியர்களுக்கு Allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2023 பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பல வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வருமான வரியில் மிகப்பெரிய சலுகையை பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமான வரி சட்டத்தின் 80c பிரிவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த திட்டம் வீட்டில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..
வீட்டில் இருந்து பணிபுரியும் முறையை பல ஆண்டுகளுக்கு முன்பே சில நிறுவனங்கள் பின்பற்றி வந்தன.. ஆனால் கொரோனா பெருந்தொற்று, அதனால் போடப்பட்ட ஊரடங்கு ஆகியவை காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கொண்டு வந்தன.. எனினும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த போதும் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர்.. இந்த சூழலில் வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு அலோவன்ஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது