சென்னையைச் சேர்ந்தவர் பொறியாளர் வினோத் ராஜ் குமார். இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்துள்ளார். தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து, இணையதளங்கள் மூலமாக பெண் பார்த்து திருமணம் செய்திருக்கிறார். இப்படி 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் வினோத். தூத்துக்குடியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு விவகாரத்து பெற்ற ஒரு பெண்ணை 3-வதாக திருமணம் செய்திருக்கிறார். திருமண இணையதளம் மூலமாகவே இந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு பின்னர் தான் வினோத் ஒரு கல்யாண மன்னன் என்பதும், அவரது குடும்பத்தினர் தன்னை போலவே மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி வினோத்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சென்னை பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண்ணை தற்போது 4-வதாக வினோத் திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரமும் தற்போது தூத்துக்குடி பெண்ணிற்கு தெரியவந்திருக்கிறது. தான் பாதிக்கப்பட்டதோடு மேலும் பல பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெண் கணவர் வினோத்திடம் சண்டை போட்டுள்ளார். அதிலிருந்து அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறார் வினோத். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் மீது வரதட்சணை கொடுமை மற்றும் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் கீழ் விசாரணை நடத்தி வினோத் ராஜகுமாரை நேரில் ஆஜராக பலமுறை அழைத்தும் அவர் ஆஜராகாமல் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு தள்ளுபடி ஆகி இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில், தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் பதுங்கி இருந்த வினோத் ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான், குடும்பத்தினர்கள் உதவியுடன் சேர்ந்து இதுவரை 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.