தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த உத்தரவை ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜான் தாமஸ் என்பவர் மனைவி மற்றும் மகனுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு பக்கவாத நோயால் படுத்த படுக்கையான ஜான் தாமஸின் ஒரு ஏக்கர் இடத்தை, மகன் டைட்டஸ் பெயரில் செட்டில்மெண்ட் ஆவணமாக அவர் எழுதி கொடுத்துள்ளார். சொத்துகளை எழுதி வாங்கிய டைட்டஸ், பெற்றோரை சரிவர கவனிக்காமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்தாண்டு ஜான் தாமஸின் மனைவி உயிரிழந்த நிலையில், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மகன் மீது காவல்நிலையம் மற்றும் சார்பு நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர், தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணங்களை ரத்து செய்ததுடன், மகன் மீது நடவடிக்கை எடுக்க டிஎஸ்பிக்கு பரிந்துரை செய்தார். மேலும், ரத்து செய்த உத்தரவை படுத்த படுக்கையான ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் அவர் நேரில் சென்று வழங்கினார்.