கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி(48). இவர் காயம்குளம் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல பிரிவு செயலாளராக பொறுப்பில் இருந்தார் இவரது மனைவி பினு(42). கோவை கல்லூரியில் தங்கி படித்து வரும் இவர்களது மகன் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் போன் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த மகன் அருகில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்த்து வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது ஷாஜி மற்றும் அவரது மனைவி இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த ஷாஜி மற்றும் பினு ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக ஷாஜி தனது மனைவி பினுவை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமும் சோகமும் நிலவி வருகிறது.