முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன் பிறகு, 9 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2017 ஆம் வருடம் தேவிகா(36) என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட, அவருடைய முதல் மனைவியான நளினி, மிகுந்த மன வேதனை அடைந்து, கடந்த 2018 ஆம் வருடம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனாலும் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த மூர்த்தி, தற்போது, அவரை விட்டு விலக முடிவு செய்து, பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த ஜென்சி என்ற பெண்ணை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்து, அதிர்ச்சியான இரண்டாவது மனைவி தேவிகா, ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் வழங்கினார்.
அவர் தன்னுடைய கணவர் மீது புகார் வழங்கியதை தொடர்ந்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தை மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறி, தற்போது மூர்த்தி கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அதன் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.