வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து டெல்லியில் உள்ள‘மேன்கைன்ட் பார்மா’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேன்கைண்டு பார்மா’ நிறுவனம், நாள்பட்ட சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மாத இறுதியில் 4,326 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. கடந்த 9ம் தேதியன்று அதன் பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது.பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளிலேயே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை நேற்று மேற்கொண்டனர்.
நிர்வாகிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், அதிகாரிகளின் சோதனைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், மேன்கைண்டு பார்மா நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளிலேயே, வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.