தலைநகர் டெல்லியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய நண்பரின் மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கி, அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் தற்போது அம்பலமாகி இருக்கிறது.
இதன் காரணமாக, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய அந்த அதிகாரிக்கு உதவியாக இருந்த அந்த அதிகாரியின் மனைவி மீதும், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
அந்த அதிகாரியால், பாதிக்கப்பட்ட சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கடந்த 2020 ஆம் வருடம் அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்தார் என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்டவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான், சென்ற 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் வருடத்திற்கு இடையில், அந்த அரசு அதிகாரி அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் விளைவாக, அந்த சிறுமியின் கர்பமானபோது, குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த விஷயத்தை தன்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார். அந்த அதிகாரியின் மனைவி தன்னுடைய மகனிடம் கூறி, சில மருந்துகளை வாங்கி வர சொல்லி, வீட்டிலேயே அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.
அந்த அதிகாரியால், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடைய வாக்குமூலம் நீதிபதியின் முன்பு பதிவு செய்யப்பட இருக்கிறது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குழந்தையின் மற்றும் மகளிர் நல வாரிய அதிகாரி என்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வேலியே பயிரை மேயலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.