எந்த ஒரு பிரச்சனைக்கும், வன்முறை என்பது எப்போதும் ஒரு தீர்வை கொடுக்காது. அதற்கு பதிலாக, நிதானமாக அமர்ந்து பேசினால், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வும் கிடைக்கும். ஆனால், கோபம் என்று வந்துவிட்டால் நம்முடைய யோசிக்கும் திறனை அது குறைத்து விடும்.
அந்த வகையில் தான், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. பொள்ளாச்சி அருகே ஆறுமுகம், கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் காதலித்து, திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால், சமீப காலமாக தம்பதிகளுக்கு இடையே சண்டை எழுந்துள்ளது. இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆறுமுகத்தை, கற்பகம் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கற்பகத்தின் தாய் வீட்டிற்கு சென்று, கற்பகத்தை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளார் ஆறுமுகம்.
ஆனால், கற்பகம் இதற்கு, கடுமையாக ஆட்சேபித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரமாரியாக குத்தி இருக்கிறார்.
இதன் பிறகு இந்த சம்பவத்தால், கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த கடந்த கற்பகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் பல்லடத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பல்லடத்தில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.