போதைக்கு அடிமையாகி, அட்டகாசம் செய்த மகனை தட்டிக்கேட்ட தந்தையை, மகன் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமையல்காரரான தேவராஜ்(63) என்பவரின் மகன் சரத்குமார்(27). இவர் சென்னையில், ஒரு தனியார் ஹோட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு வேலை பறிபோனதாக தெரிகிறது.
வேலை பறிபோனதால், விரக்தியில் இருந்த சரத்குமார், போதை பழக்கத்திற்கு அடிமையானார். நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டு இருந்தார். அந்த விதத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர், போதையில் வீட்டிற்கு வந்தார் சரத்குமார்.
அப்போது சரத்குமாரின் தந்தை தேவராஜும், மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது குடித்துவிட்டு வந்த மகனை, தந்தை தேவராஜ் கண்டிருக்கிறார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, கோபமடைந்த சரத்குமாரின் தந்தை தேவராஜ், கல்லால் மகனை அடித்துள்ளார். இதனால், ஆத்திரம் கொண்ட மகன் சரத்குமார், கத்தியை எடுத்து, தந்தையின் கழுத்தை அறுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அலறி துடித்த தேவராஜ், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள், அவரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.