தெலுங்கு திரையுலகின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் ராஜ் மற்றும் கோட்டி-யில் இப்போது ராஜ் இல்லை. மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இசையமைப்பாளர் ராஜ்(68) காலமானார். ராஜின் இயற்பெயர் தோட்டகுரு சோமராஜு. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
சினிமா இசை உலகில் ராஜ்-கோட்டி ஜோடியின் அடையாளம் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவர்களின் கூட்டணியில் பல வெற்றிப் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவர்களின் இசை பல தசாப்தங்களாக இசை ஆர்வலர்களை மகிழ்வித்தது.

ராஜ் -கோட்டியின் காம்பினேஷனில் பல மறக்கமுடியாத பாடல்கள் வெளிவந்துள்ளன. இருவரும் தெலுங்கு உட்பட பல மொழிகளில் 180 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனர். அவர்களின் 3000 பாடல்களில், சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர். கோட்டியை சில காரணங்களால் பிரிந்த ராஜ், சொந்தமாக சில படங்களுக்கு இசையமைத்தார். மேலும் ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளார். ராஜின் மறைவு திரையுலகில் பெரும் சோக நிழலை வீசியுள்ளது. ராஜின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.