fbpx

அரசு பள்ளி மாணவர்களின் உணவு… கால்நடை பண்ணைக்கு விற்பனை…! அண்ணாமலை பகீர் தகவல்

மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 – 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும். இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்றுடன் நிதியாண்டு முடிந்த நிலையில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை. வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது.

ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது. பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு?

உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

Government school students’ food… sold to livestock farms…! Annamalai

Vignesh

Next Post

தமிழகமே..! ரூ.5 முதல் ரூ.75 வரை 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது...!

Tue Apr 1 , 2025
Fee hike implemented at 40 toll booths ranging from Rs.5 to Rs.75

You May Like