விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அங்கிருந்த பனைங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும், 16 விளக்குகள் வீதம் 14 ஆயிரத்து 992 விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாநாட்டு திடலின் இருபுறமும் தொண்டர்கள் வசதிக்காக 300 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலின் உள்ளே செல்லும் மின்வாரிய கம்பிகளை அகற்றி கேபிளாக பூமிக்கடியில் புதைக்க மின்வாரியம் அனுமதி தரவில்லை. அதனால், மாநாடு நடைபெறும் தினத்தில் திடலுக்குள் செல்லும் மின் கம்பிகள் வழியாக மின்சாரம் செல்வதை தடை செய்யவுள்ளனர்.
தொண்டர்களுக்கு மாநாட்டு திடலில் உணவு வழங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கூட்ட நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மாநாட்டு திடலின் அருகில் இருந்த ஒரு வயது 8 பனங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது. பனமரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என அரசின் உத்தரவு உள்ள நிலையில், அதற்கான எந்தவித அனுமதியும் இல்லாமல் பனங்கன்றுகள் வெட்டப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Read More : வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! கனமழை வெளுத்து வாங்கும்..!!