கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்..
கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி. ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது..
முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு தினங்களுக்கு காவேரி மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருவார் என்று மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் ஸ்டாலினின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.. நாளை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது..
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மோடி கேட்டறிந்துள்ளார்..