தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாய தொழிலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அதிலிருந்த குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்ட சென்றார். அப்போது அதிலிருந்த பாம்பு ஒன்று பூவரசனை கடித்து விட்டது. பூவரசனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். மேலும் அவரைக் கடித்த பாம்பை பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலுக்குள் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்தார் அவரது தாய்.
அங்கே பூவரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவரது இரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பூவரசனை கடித்த பாம்பை அவரது தாய் பாட்டிலில் அடைத்து எடுத்து வந்ததால் மருத்துவமனையில் அதனை காண கூட்டம் கூடியது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மகனை என்ன பாம்பு கடித்தது என்று மருத்துவர்கள் கேட்டால் பதில் சொல்வதற்காக அந்த பாம்பையே பாட்டிலில் அடைத்து பிடித்து வந்திருக்கிறார் அவரது தாய். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை நெகிழச் செய்திருக்கிறது.