மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குக்கி உள்ளிட்ட பழங்குடி இனத்தவருக்குமிடையே கடந்த மே 3ஆம் தேதி மோதல் வெடித்தது. தங்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டுமென்ற மைதேயி இனத்தவரின் கோரிக்கைக்கு, பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையொட்டி, கடந்த மே மாதம் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில், 100 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ‘அரசு சொல்வதைவிடப் பல மடங்கு பேர் இறந்திருக்கிறார்கள்’ என்கிறது சமூக ஆர்வலர்கள் குழு. மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்று வந்த பிறகும் கூட, அங்கு தீவைப்புச் சம்பவங்களும், துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளும் நின்றபாடில்லை. இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாம்ஃபெல் பகுதியில் வசிக்கும் ஒரே பெண் அமைச்சரான தொழில்துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் (Nemcha Kipgen) அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவத்தின் போது அமைச்சர் நெம்சா கிப்ஜென் வீட்டில் இல்லை என்று அதிகாரிகள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
உயர் அதிகாரிகள் தலைமையிலான பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பழங்குடியினர் அதிகமுள்ள காங்போக்பி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நெம்சா கிப்ஜென், முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையிலான 12 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.