இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக விளங்குகிறது ஐபிஎல். கோடிகளில் வருவாய் கொட்டுவதால், இந்த தொடரில் விளையாட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் அபிமான வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகிறார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனால் ஐபிஎல் போட்டியை போன்றே அந்த தொடருக்கான வீரர்கள் ஏலமும் பிரபலமாக உள்ளது.
மூன்று அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மெகா ஏலம் மட்டுமல்ல, ஒவ்வொரு சீசனுக்குமான மினி ஏலமும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கத் தவறுவதில்லை. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடைபெற உள்ளது. மும்பை, பெங்களூர் என இந்திய நகரங்களில் நடந்து வந்த ஐபிஎல் ஏலம் முதல்முறையாக வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மூலம் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் நிர்வாகிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதுவரை ஐபிஎல் ஏலங்களை ஆண்கள் மட்டுமே முன்னின்று நடத்தி வந்தனர். இப்போது முதல் முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஏலத்தை நடத்த இருக்கிறார்.
ஏலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1,166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 333 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 214 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். எஞ்சிய 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் 333 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், அணிகளின் மொத்த தேவை 77 பேர்தான். அவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். அதுமட்டுமன்றி அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களுக்கான ஊதியம் போக எஞ்சியுள்ள தொகைக்கு மட்டுமே தேவையான வீரர்களை ஏலம் கேட்க முடியும்.