கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் படுகாயமடைந்தனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், போராட்டக்காரக்கள் அடித்து நொறுக்கி, தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 379 பேரை போலீசார் கைது செய்தனர். 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியின் வேதியியல் ஆசிரியையான ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.