கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பிரபல செய்தி நிறுவன அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த, காரை சேதப்படுத்திய மர்ம நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற பிரபல செய்தி நிறுவனமான ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் மீது, இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
அதிகாலை நேரத்தில், அந்த அலுவலகத்தின் மீது, தாக்குதல் நடத்திய, அந்த மர்மநபரை, அக்கம், பக்கத்தில் இருந்த நபர்கள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் சூரஜ் என்று தெரிய வந்திருக்கிறது.
அதிகாலை வேளையில், அந்த செய்தி நிறுவன அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்த அந்த மர்ம நபர், பாதுகாப்பு அறையின் கண்ணாடியையும், கற்களை கொண்டு, உடைத்துள்ளார். அதோடு, அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவருடைய கார் கண்ணாடியையும் உடைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர், சில மாதங்களுக்கு முன்பு, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் நேர்காணல் குறித்து, இந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, ஒரு அமைப்பைச் சேர்ந்த நபர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருக்கின்ற அந்த செய்தி நிறுவனத்தின், அலுவலகத்தின் மீது, ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.