fbpx

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!. நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு அமைப்பு!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Judge Yashwant Verma: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது. இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது. பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார். அதன்படி பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. மேலும் தற்போதைய நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Readmore: மக்களே…! இந்த 331 செயலிகள் ஆபத்தானவை… சைபர் பாதுகாப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி தகவல்…!

English Summary

Money trapped in a bind!. 3-judge panel formed to investigate allegations against Judge Yashwant Verma!. Supreme Court takes action!

Kokila

Next Post

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு!. காதலியிடம் வாக்குமூலம் பதிவு!. இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

Sun Mar 23 , 2025
Actor Sushant Singh Rajput death case closed! CBI files final report!

You May Like