சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜனவரி 27ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அடுத்த 3 தினங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜனவரி 28, 29ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை நிலநடுகோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்க கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.