கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான் என்று கூறப்பட்டாலும், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது…
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் BA.2.75 என்ற புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 இந்திய மாநிலங்களில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது.. ஆனால் இந்த துணை மாறுபாடு கண்டறியப்பட்டதை மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஒமிக்ரான் துணை மாறுபாடு இந்தியாவைத் தவிர ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா , அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
புதிய BA.2.75 மாறுபாடு அடுத்த ஆபத்தான மாறுபாடாக இருக்குமா உடனடியாக கூறமுடியாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் இந்த மாறுபாட்டை தொடர்ந்து கண்கானிக்க வேண்டும் என்றும், ஏனெனில் இது BA.2 மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க ஆன்டிஜெனிக் மாற்றத்தைக் கொண்டுள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. எனவே இது ஆபத்தான மாறுபாடாக இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்..