நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் மற்றும் பத்திர பதிவுத்துறையில் ஊழல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் உள்ளிட்டார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் உள்ளிட்ட செயல்களில் பலர் ஈடுபட தான் செய்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஏராளமான நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்ற நபர் தன்னிடம் வேலை பார்க்கும் பகவதி என்ற பெண்ணை தமிழரசனுடன் பழக வைத்து அவரிடமிருந்த நிலத்தின் ஆவணங்களை அந்த பெண்ணின் மூலமாக கைப்பற்றி, பின்பு அதன் மூலமாக தமிழரசனுக்கு சொந்தமான இடங்களை 2 பிரிவுகளாக கோபால் மற்றும் பகவதி உள்ளிட்டோர் பதிவு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த தமிழரசன் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் இதுகுறித்து தகராறு நடைபெற்று வந்த சூழ்நிலையில், தமிழக அரசனை கொலை செய்வதற்கு திட்டமிட்டு அவருடைய உறவினரான மாதவன் மகேஷ் மற்றும் கூலிப்படையைச் சார்ந்த செல்வம், சீனிவாசன், பாலயோகேஷ், விஜயகுமார், முத்துராஜ், கோபி போன்ற 8 பேர் ஒன்றிணைந்து கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி பட்டணங்காத்தான் இசிஆர் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழரசனை மடக்கி பிடித்து, பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மாதவன் மகேஷ், 2வது குற்றவாளியான செல்வம் உள்ளிட்டோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்ற 6 நபருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜி விஜயா உத்தரவு பிறப்பித்தார். அபராதத்தை கட்டவில்லை என்றால் மேலும் 2 வருட காலங்கள் சிறை தண்டனை வழங்கவும் இந்த தீர்ப்பில் அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.