சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர் அவரது தாய்யுடன் நேற்று பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. இதனால் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கை முந்தி செல்வதற்காக அந்த சிறுமி ஹாரன் அடித்துக கொண்டே இருந்தார். ஆனால் சிறுமிக்கு முன்னாள் பைக்கில் சென்று கொண்டிருந்தவர் வழிவிடவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி அவரை முந்தி சென்று அவரது பைக்கின் முன்னால் தனது வண்டியை நிறுத்தி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுமி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் அந்த நபர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து பயந்து போன சிறுமி அவரது தாயை அங்கேயே விட்டுவிட்டு பைக் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கத்திக்குத்து பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இறந்த நபர் பிறவியிலேயே காது கேளாதவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், அந்த சிறுமியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.