தமிழகம் தற்போது கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதற்கேற்றார் போல நாள் ஒரு வண்ணமும், பொழுது ஒரு மேனியமாக தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.
அந்த வகையில், சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள மேடவாக்கம் சந்திப்பில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று இருக்கிறது. இந்த ஏடிஎம்மில் யாரோ ஒருவர் கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அந்த வங்கியின் மும்பையில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.
இதனை அடுத்து அந்த வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை காவல்துறையினருக்கு இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதோடு அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார்(22) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.