உத்தரப்பிரேதசத்தில் ஷார்ப்னரை வாயில் வைத்து பென்சில் சீவியபோது, பென்சில் தோல் தவறுதலாக தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டம் பகாதி வீர் கிராமத்தில் 1ஆம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா என்ற மாணவி, தனது சகோதரன் அபிஷேக் மற்றும் சகோதரி அன்ஷிகாவுடன் வீட்டு மொட்டைமாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது தனது வாயில் ஷார்ப்னரை வைத்து பென்சிலை சீவியுள்ளார். எதிர்பாராத விதமாக சிறுமியின் வாய்க்குள் சென்ற பென்சில் தோலானது ஆர்த்திகாவின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுக்குழாயில் அடைபட்ட பென்சில் தோலால் மூச்சுத்திணறி சிறுமி மயங்கியுள்ளார்.
நிலைமை மோசமாகவே சிறுவர்கள் இருவரும் பெற்றோரிடம் ஓடி நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுமியை உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு வரும் முன்பே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமிக்கு பிரேத பரிசோதனை செய்ய மறுத்துவிட்டதால், உடலை வீட்டிற்கே கொண்டுசென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.