அடுத்த தேர்தல் எப்போது வரும் என அரசு ஊழியர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் காத்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயலை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தங்கமணி, ”தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இல்லை என்பதற்கு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரமே சாட்சி. நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தான் திமுக அரசின் சாதனை. கோவில் போன்ற அதிமுக அலுவலகத்தை திமுக அரசின் உதவியோடு கதவை எட்டி உதைத்தும், உடைத்தும் உள்ளே சென்றதற்கு மு.க.ஸ்டாலின் அரசு துணை நின்றது.
இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் விரைவில் தக்க தண்டனை கிடைக்கும். மின்கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த போதும் பலமுறை மத்திய அரசிடம் கடிதம் வந்தும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை முடக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. மின் கட்டண உயர்வால் தறித் தொழிலே முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து 30 ஆயிரம் கோடி மானியம் வர வேண்டி உள்ளது. அதற்காக மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் அந்த மானியத்தை பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது. அரசு ஊழியர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் எப்போது தேர்தல் வரும் என காத்துக் கொண்டுள்ளனர். இன்றைய ஆட்சியில் திமுக அமைச்சர்களை தவிர வேறு யாரும் மகிழ்ச்சியாக இல்லை”. இவ்வாறு அவர் பேசினார்.