fbpx

பெரும் இழப்பு…! இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…!

இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். 108 வயதான பாப்பம்மாள் பாட்டி கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியுள்ளார். இவரது சேவைகளை மதித்து 2021-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே காலில் விழுந்து வணங்கியது அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த அங்கீகாரமாகும். இந்த நிலையில் அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்; கழக முன்னோடியும் – கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.

1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர். 1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு. பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர். பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” என்று அவரை வாழ்த்தினேன்.

கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்” என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். திருமிகு. பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

Tamil Nadu Chief Minister Stalin’s condolence on death of Pappammal

Vignesh

Next Post

தொடர் பண்டிகைகள்!. 6000 சிறப்பு ரயில்கள்! ரயில்வே அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

Sat Sep 28 , 2024
Special Trains: அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து தொடர் பண்டிகைகள் வருவதையொட்டி, 6000 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். துர்காபூஜை வரும் அக்டோபர் 8ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 7 மற்றும் 8 ம்தேதிகளில் வட மாநிலங்களில் சாத் பூஜை நடக்கிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெளியூர்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த […]

You May Like