22-ம் தேதி முதல் 27-ம் வரை தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2022- 2023-ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில் பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றுல் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டு தோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2022-2023-ம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22 முதல் 27- ம் தேதி வரை விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
