கன்னியாகுமரி அருகே 14 வயது சிறுமி ஒருவரை, பேய் படம் காட்டுவதாக, இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் செய்த செயலால், பதறி கூச்சலிட்ட சிறுமி.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர், வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின், 14 வயதான மகள் கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய வீட்டிற்கு அருகே, இருந்த புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக, தன்னுடைய தாயுடன் சென்றார்.
பின்பு அங்கே, அந்த சிறுமி, சக வயது சிறுமிகளுடன் ஓடி, ஆடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(25) என்ற ஆட்டோ ஓட்டுனர், அந்த 14 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். தனக்குத் தெரிந்த நபர் என்பதால், அந்த சிறுமியும் அவரிடம் நன்றாக உரையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரம் சென்ற பிறகு அந்த சிறுமியிடம், உனக்கு செல்போனில் பேய் படம் காட்டட்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவருடைய கேள்வியால், ஆர்வமான அந்த சிறுமி, சரி என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு பேய் படம் இருட்டில் தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து அந்த சிறுமியை அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற பிரசாந்த், அந்த சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
அவருடைய செயலால், பதறிப் போன அந்த சிறுமி, சத்தம் போட்டு இருக்கிறார், இதனை தொடர்ந்து, உறவினர்கள் அனைவரும் மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர்கள் வருவதற்கு முன்னரே, பிரசாந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆகவே உறவினர்கள், அழுது கொண்டிருந்த சிறுமியை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில், குளச்சல், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் வழங்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில், தலைமறைவாக இருந்த பிரசாந்தை, அதிரடியாக கைது செய்தனர்.