நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சிறைப்பு செல்ல மறுத்து, கத்தியுடன், நீதிமன்ற வளாகத்தில் கலாட்டாவில், ஈடுபட்ட நபரை, காவல் துறையினர் விரட்டிச் சென்று, கைது செய்த சம்பவம் கோவையில், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயமுத்தூர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து, அவருடன் வாழ்ந்து வருகிறார், பஷீர் மீது கடந்த 2021 ஆம் வருடம் காஞ்சனா என்ற பெண் வழங்கிய புகாரில், பஷீர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு , ஆஜராகவேண்டும் என பலமுறை அவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த வழக்கில் தொடர்ந்து, ஆஜராகாமல் இருந்து வந்திருக்கிறார். ஆகவே, பஷீக்கு நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்டை பிறப்பித்தது.
இதனால், நேற்று தன்னுடைய மனைவி பிரியாவுடன், நீதிமன்றத்திற்கு வந்த
அந்த நபர், நீதிமன்றத்தில், காவல்துறையினர் அவரை கைது செய்ய தயாராக இருந்ததை பார்த்து, ஆவேசம் கொண்டு, சிறைக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்து, ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையில், காவல்துறையிடமிருந்து, தப்பி சென்ற, அந்த நபரை, காவல்துறையினர் விரட்டி, பிடித்து, நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு, காவல்துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து, செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் அவர் ரகளையில் ஈடுபட்டதால், அங்கே சற்று நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.