fbpx

அமெரிக்கா-மெக்சிகோ இடையே வர்த்தக போர்!. உலக பொருளாதாரம் பாதிக்கும் அபாயம்!

​​Trade war: கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ள உத்தரவு வர்த்தகப் போரைத் தூண்டியுள்ளது.

டிரம்ப், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அதிர்ச்சிகரமான நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை முன்னிறுத்தி உள்ள டிரம்ப், தனது பிரசாரத்தின் போதே, அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை மற்றும் பாரபட்சமான வரி விதிப்புகளை முக்கியமாக பேசியிருந்தார். எனவே, ஆட்சிக்கு வந்ததும், தனது முதல் 3 முக்கிய வர்த்தக பங்காளிகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரி விதிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதன்படி, அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதே சமயம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், இயற்கை வாயு, மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு மட்டும் 10 சதவீத வரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்கர்களை பாதுகாக்க இந்த வரிகள் அவசியம்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை கனடாவும், மெக்சிகோவும் குறைக்க வேண்டும். எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலையும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகவே இந்த வரிவிதிப்பு. தேவைப்படும் பட்சத்தில் இந்த வரியை மேலும் உயர்த்த தயங்க மாட்டோம்’’ என எச்சரித்துள்ளார். இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ள டிரம்ப், உலகளாவிய வர்த்தக போரை தொடங்கி வைத்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் கனடாவும், மெக்சிகோவும் சரியான பதிலடி கொடுத்துள்ளன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், ‘‘வெள்ளை மாளிகை எடுத்துள்ள முடிவு நம்மை ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிரித்து விட்டன. கலிபோர்னியா காட்டுத் தீ, ஆப்கானிஸ்தான் யுத்தம், கத்ரீனா புயல் என பல இக்கட்டான தருணங்களில் கனடா மக்கள் அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது கனேடியர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கிறோம். இதில் அமெரிக்க மதுபானங்கள், பழங்களும் அடங்கும்.

கனடா மக்களுக்கு இது இக்கட்டான காலகட்டம். எனினும் நீங்கள் கனடா பொருட்களை வாங்கி உபயோகிக்க முன்னுரிமை கொடுங்கள்’’ என்றார்.இதே போல மெக்சிகோ அதிபர் கிளாடியா சியின்பாம் அளித்த பேட்டியில், ‘‘சமூகவிரோத கும்பலுடன் மெக்சிகன் அரசு கூட்டணி வைத்துள்ளது என்ற வெள்ளை மாளிகையின் அவதூறை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அதே போல் எங்கள் பிரதேசத்தில் தலையிடும் எந்தவொரு நோக்கத்தையும் நிராகரிக்கிறோம்.

இந்த நேரத்தில் மெக்சிகோவின் நலன்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுக்கு பதிலடி வரிகளை விதிக்க பொருளாதார அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்கா முதலில் தனது நாட்டிற்குள் எளிதாக போதைப்பொருள் கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதை செய்யாமல், பிறர் மீது பழிபோடுவது அநியாயம்’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, சீனா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த வரி விதிப்புகள் நீடித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கனடா, மெக்சிகோவுடன் சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை விதிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் மிக மோசமடையக்கூடும். அதன் காரணமாக, உணவு பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வீட்டுவசதி, போக்குவரத்து விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாகத்தான் முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி மீது அமெரிக்கர்கள் கோபமடைந்தனர். தற்போது டிரம்ப் அதை விட மோசமான கட்டத்திற்கு அமெரிக்காவை கொண்டு செல்லும் விபரீத நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் பட்சத்தில் அது உலக பொருளாதாரத்தையும் படுகுழியில் வீழ்த்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Readmore: புதிய வாகனம் வாங்குகிறீர்களா? வாஸ்து சொல்லும் இந்த விதிகளை பின்பற்றுங்கள்..!

English Summary

Trump’s dramatic announcements!. ​​Trade war between the United States and Mexico!. Risk of affecting the global economy!

Kokila

Next Post

”சாலையோரம் வசிப்பவர்களுக்கு வீடு”..!! ”குழந்தைகளுக்கு கல்வி”..!! சென்னை முழுவதும் கணக்கெடுப்பு பணி தீவிரம்..!!

Mon Feb 3 , 2025
The Chennai Corporation has begun a survey of those living along the roadside.

You May Like