பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய சுற்று பணிநீக்கங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மெட்டாவின் இந்த நடவடிக்கை இந்தியாவிலும் எதிரொலித்தது.. இதன் காரணமாக மெட்டாவில் வேலை செய்த இந்தியர்கள் பலரும் தங்கள் வேலையை இழந்தனர்..

மார்க ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டின் இறுதியில் இதுகுறித்து பேசிய போது “ 2023 ஆம் ஆண்டில், நாங்கள் குறைந்த எண்ணிக்கையிலான முதலீடுகளை, உயர் முன்னுரிமை வளர்ச்சிப் பகுதிகளில் கவனம் செலுத்தப் போகிறோம். எனவே சில அணிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.. ஆனால் மற்ற பெரும்பாலான அணிகள் அடுத்த ஆண்டில் சுருங்கிவிடும். எனவே இன்று இருக்கும் ஊழியர்களை விட 2023ம் ஆண்டில் குறைவான ஊழியர்கள் இருப்பார்கள் எதிர்பார்க்கிறோம், ” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் புதிய சுற்று பணிநீக்கங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பல குழுக்களின் வரவு செலவுத் திட்டங்களை இறுதி செய்வதை அந்நிறுவனம் தாமதப்படுத்தியுள்ளது.. இதனால் பணிநீக்கம் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட அந்நிறுவனம் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது.. எனினும் இந்த தகவல் குறித்து மெட்டா நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை..
மெட்டாவை தொடர்ந்து அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர், இண்டெல், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.. 2023-ம் ஆண்டில் மட்டும், 336க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..