நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி சூளுரை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அச்சம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறி இருக்கிறார்கள். எங்கள் தலைவர்களான சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் அச்சம் இல்லை. ஆனால், பிரதமரிடம் அச்சம் இருக்கிறது.அவரால் உலகம் முழுவதற்கும் செல்ல முடியும்; ஆனால் மணிப்பூருக்குச் செல்ல முடியாது. ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றார். ஆனால், பிரதமரால் ஏன் முடியவில்லை? ஏனெனில் அவர் அச்சத்துடன் இருக்கிறார். யார் அச்சத்துடன் இருக்கிறார்களோ அவர்களால் நாட்டை நடத்த முடியாது” என தெரிவித்தார்.