ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பைத் திருத்துவதற்கு மத்திய அரசு ஊதியக் குழுவை உருவாக்குகிறது. 1947 ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்சம் ஏழு ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 7வது மத்திய ஊதியக் குழு பிப்ரவரி 28, 2014 அன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டது.. ஊதியக் குழுவின் அரசியலமைப்புச் சட்டமானது மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறையின் அமைச்சகம்) கீழ் வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது மத்திய ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்த அரசாங்கம் முன்மொழிகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார். அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் மற்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பதிலளித்தார்..
பணவீக்கம் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான மதிப்பில் ஏற்பட்ட அரிப்பை ஈடுசெய்யும் வகையில் அவர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படுகிறது. அனைத்து இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் கீழ் அளவிடப்பட்ட பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், அகவிலைப்படி அவ்வப்போது திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..