பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு (CCEA), ஒன்பது மாநிலங்களில் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரூ.20,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெரிசலைக் குறைத்தல், பிணைய இணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வலையமைப்புத் திறனை அதிகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த ஒப்புதல்களின் கீழ், ரூ.10,783 கோடி மதிப்பில் மூன்று பல வழித்தட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சுமார் 656 கி.மீ தூரத்திற்கு புதிய இரயில் பாதைகள் இணைக்கப்படும். கரக்பூர் – ஜார்சுகுடா இடையே நான்காவது பாதை, கட்னி – பெண்ட்ரா சாலை இடையே நான்காவது பாதை மற்றும் பிலாஸ்பூர் – பெந்த்ரா சாலை இடையே மூன்றாவது பாதை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் மூலம் 14 மாவட்டங்கள் பயனடைவதுடன், சுமார் 56 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட 4,790 கிராமங்களுக்கு ரயில் இணைப்பு மேம்படும். மேலும், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு போன்ற முக்கியப் பொருட்களின் போக்குவரத்து எளிமையாக்கப்படும்.
இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 27 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து உருவாக்கப்படுவதுடன், ரயில்களின் இயக்கத்திறன் மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதனால் தளவாடச் செலவுகள் குறைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய் இறக்குமதி சுமார் 12 கோடி லிட்டர் வரை மிச்சப்படும். அத்துடன், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு சுமார் 62 கோடி கிலோ வரை குறைக்கப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ.10,021 கோடி மதிப்பிலான மேலும் ஐந்து ரயில்வே திட்டங்களுக்கும் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே 3 மற்றும் 4-வது பாதைகள், ஒயிட்ஃபீல்டு – பங்காரப்பேட்டை இடையே 3 மற்றும் 4-வது பாதைகள், ஓசூர் – ஓமலூர் மற்றும் சேலம் – கரூர் – திண்டுக்கல் பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை பணிகள், மற்றும் செகந்திராபாத் – காஜிபேட் பிரிவில் பல்தடப் பணிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த 5 திட்டங்கள் மூலம் 17 மாவட்டங்கள் பயன்பெறுவதுடன், 540 கி.மீ புதிய இரயில் பாதை சேர்க்கப்பட்டு, 52 லட்சம் மக்கள் வசிக்கும் 2,121 கிராமங்களின் இணைப்பு மேம்படும்.
இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டமிடல் மூலம் பன்முனை இணைப்பை மேம்படுத்தும் ‘பிஎம் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தின்’ கீழ் திட்டமிடப்பட்டுள்ளன.



