இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கியதை சீனா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது. இந்த மோதலின்போது, பாகிஸ்தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15 ஏவுகணைகள் மற்றும் துருக்கி தயாரித்த ட்ரோன்களை பயன்படுத்தி இந்திய ராணுவத் தளங்களை குறிவைத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், சீனாவின் AVIC நிறுவனத்துடன் தொடர்புடைய பொறியாளர் ஜாங் ஹெங் அளித்த பேட்டி தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கிய குழுவில் தாமும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “போர் விமானங்கள் புறப்படும் சத்தமும், தாக்குதல் எச்சரிக்கை சைரன்களும் தொடர்ந்து கேட்கப்பட்டன. அது எங்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பெரிய சோதனையாக இருந்தது” என அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் சீனாவின் நேரடி தொழில்நுட்ப பங்களிப்பு இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10CE போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் 4.5-ஆம் தலைமுறை போர் விமானங்களாக கருதப்படுகின்றன. சீனாவிற்கு வெளியே இந்த வகை விமானங்களை இயக்கும் ஒரே நாடாக பாகிஸ்தான் உள்ளது.
மேலும், “பாகிஸ்தான் சீன ஆயுதங்களுக்கான நேரடி ஆய்வகமாக செயல்படுகிறது” என்று இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் முன்பே தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் ராணுவ உபகரணங்களில் பெரும்பாலானவை சீனாவிலிருந்தே கிடைக்கின்றன என்றும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சமீபத்திய அறிக்கையிலும், தகவல் போர், இணையவழி நடவடிக்கைகள், உளவுத்துறை ஆதரவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more: இந்தியாவின் அடுத்த முப்படைத் தளபதியாக என்.எஸ். ராஜா நியமனம்..! யார் இவர்..?



