தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 58 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2026 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்வு அரசு ஊழியர்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவும் என கூறப்படுகிறது.
அதேசமயம், அகவிலைப்படி உயர்வு காரணமாக ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,230 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன.



