ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த நிலையில், மூத்த மகளான 16 வயது சிறுமியை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி இந்த கொடுமையை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக தந்தை மிரட்டியதாகவும், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் கர்ப்பமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக சிறுமி கர்ப்பமானதை தனது அத்தையிடம் தெரிவித்த நிலையில், அந்த தகவல் தந்தைக்கு சென்றுள்ளது. இதையடுத்து அத்தை உதவியுடன் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிய தந்தை, சிறுமியை அவற்றை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் பின்னரும் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாகவும், கடந்த 2025-ஆம் ஆண்டு அவர் மீண்டும் கர்ப்பமானதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த முறை விவகாரம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, சிறுமியை சில மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் மறைத்து வைத்துள்ளனர்.
இதற்காக முதலில் வர்ஷா மண்டல் என்ற செவிலியரின் வீட்டிற்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரது அறிமுகமான மற்றொரு செவிலியரான கீதா ராயின் வீட்டில் சுமார் இரண்டு மாதங்கள் தங்கவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, அவர் வயது வந்த பெண் மற்றும் திருமணமானவர் என்பதுபோல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி ராய்பூரின் டாங்கனியா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பின்னர், தந்தை, மருத்துவமனை தொடர்புடையவர்கள் மற்றும் மற்றொரு சிலரின் உதவியுடன் அந்தப் பச்சிளம் குழந்தை வேறு ஒருவரிடம் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சில தகவல்களின்படி, குழந்தை ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகு சிறுமி சுமார் 15 நாட்கள் செவிலியரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது தந்தை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் தனது தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாய் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நியூ ராஜேந்திர நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் அடிப்படையில் சிறுமியின் தந்தை, அவரது அத்தை, மருத்துவமனை தொடர்புடையவர்கள், குழந்தையை வாங்கியதாகக் கூறப்படும் நபர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தில் தொடர்புடைய மருத்துவப் பணியாளர்களின் பங்கு குறித்தும், குழந்தை தற்போது எங்கு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளுடன், போக்சோ சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமிக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, போலி ஆவணங்கள் மற்றும் குழந்தை விற்பனை என பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: “அம்மா… என்ன விட்டுருமா!” கதறித் துடித்த பிஞ்சு குழந்தை… கள்ளக்காதலுக்காக தாய் செய்த கொடூரம்!



