உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், எட்டு குழந்தைகளின் பெற்றோரான இருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அமித் குப்தாவும், ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நீலம் குமாரியும் காதல் விவகாரத்தில் ஒன்றாகச் சென்றதாகக் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
பாராபங்கி பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நீலம் குமாரியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இருவரும் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே, நீலம் குமாரி வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் இரு குடும்பங்களையும் சேர்ந்த எட்டு குழந்தைகளும் பெற்றோரின் அரவணைப்பின்றி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருவரும் காணாமல் போன விவகாரத்தை ஆரம்பத்தில் குடும்பத்தினர் வெளியே தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஆனால், சுமார் 15 நாட்களாகியும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இருவரையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பணம் மற்றும் நகைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: சுங்கச்சாவடி அருகில் வசிப்பவர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் புதிய FASTag பாஸ்…



