சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இப்போதெல்லாமல் சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி ஆரம்பிக்கின்றனர். உடனே எல்லாம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். நான் 50 ஆண்டுகால அரசியல் மூலம் படிப்படியாக உயர்ந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதிமுகவில் மட்டுமே உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர முடியும்.
புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட அதிமுக தலைவர்களைத் தான் உதாரணமாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் நலத்திட் டங்களை செயல்படுத்தியவர்கள் நமது தலைவர்கள். தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியது அதிமுகதான். அதேபோல் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கினோம். விவசாயத்துக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் தொடரும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கப் படும். அதிமுக ஆட்சியில் மக்கள் மன நிறைவு பெறும் வகையில் பல லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மணமகளுக்கு பட்டுப் புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என்றார்.