கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம்.. மனைவியைக் கொன்று உடலை வீசிய கணவன்!

WhatsApp Image 2026 10 25 at 12.05.14 PM

பெங்களூருவில் வடிகால் பகுதியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரே கொலையைச் செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்த நிலையில், அவர் உடலைப் பையில் எடுத்துச் சென்று வீசியதாக 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ருக்ஸானா (25). பீகாரைச் சேர்ந்த இவர், முகமது இர்ஃபாஜ் (22) என்பவரைச் சுமார் ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ருக்ஸானாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த அவர், பீகாரில் பலூன்கள் விற்பனை செய்தபோது இர்ஃபாஜுடன் பழகியுள்ளார். இந்தப் பழக்கம் காதலாக மாறியதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பிழைப்புக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்குச் சென்ற தம்பதியினர், அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அப்போது, ருக்ஸானா வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக இர்ஃபாஜ் சந்தேகித்துள்ளார். அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை நாளடைவில் தீவிரமடைந்துள்ளது.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி ஏற்பட்ட மோதலின்போது, இர்ஃபாஜ் கல்லால் ருக்ஸானாவின் தலையில் தாக்கியுள்ளார். மேலும், அவரது வாயில் துணியைத் திணித்து கொலை செய்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் உடலை ஒரு பையில் அடைத்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற அவர், கோபாலபுரா பகுதியில் உள்ள வடிகாலில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 13-ஆம் தேதி, கோபாலபுரா வடிகால் பகுதியில் பிளாஸ்டிக் உறையால் சுற்றப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். உடல் யாருடையது என்பதைக் கண்டறியவும், கொலையில் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும் மகடி ரோடு காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் வீடு வீடாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, கோபாலபுரா பகுதியில் வசித்துவந்த திருமணமான பெண் ஒருவர் காணாமல் போனது போலீசாரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவரது கணவர் இர்ஃபாஜிடம் விசாரித்தபோது, ருக்ஸானா பீகாரில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பதிலில் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மனைவியைக் கொலை செய்துவிட்டு உடலை வடிகாலில் வீசியதை இர்ஃபாஜ் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், கொலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Also Read: ‘குக் வித் கோமாளி’ புகழ் செப் தாமு காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Saranya

Next Post

“புருஷன் போனா என்ன, நான் இருக்கேன்!" கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்.. ஏமாற்றி கர்ப்பமாக்கிய போலீஸ் ஏட்டு!

Sun Oct 25 , 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில், கணவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பெண்ணிடம் திருமணமானதை மறைத்து பழகி, குழந்தை பிறந்த பின்னர் அவரைக் கைவிட்டதாக போலீஸ் ஏட்டு மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சாம்சன் என்ற ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கருங்கல் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாகக் கருங்கல் காவல் […]
WhatsApp Image 2026 10 25 at 12.13.13 PM

You May Like