தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் கூடியிருந்த பொழுதுபோக்கு மையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர். இரு சம்பவங்களிலும் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வெடேலா டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு இதில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அதிகாலை நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்த சிலர், விடுதிக்கு வெளியே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் குறிவைத்து தொடர்ந்து சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர்.
துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிலரின் நிலை குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, கேப்டவுன் அருகே உள்ள லாண்ட்வ்லே டவுன்ஷிப்பிலும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பொழுதுபோக்கு மையத்துக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு இருந்தவர்களை நோக்கி திடீரென சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் துப்பாக்கி வன்முறை குறித்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டவுன்ஷிப் பகுதிகளில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இரு சம்பவங்களிலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Also Read: “எனக்கு 2 குழந்தையும் வேண்டாம்.. இவன்தான் வேணும்!” 20 வயது கள்ளக்காதலனை விட்டுவர மறுத்த 2 குழந்தைகளின் தாய்!



