முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று மேலும் விரிவடைகிறது. தவெக அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு அமைச்சரவை இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கூட்டணி கட்சிகளின் ஆதரவை நீண்டகாலமாக உறுதிப்படுத்தும் முயற்சியாகவும், எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது காரணமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை முதல்வர் விஜய்யிடம் வழங்கினர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களது ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் நேரடி பங்கெடுக்க உள்ளன.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாநில அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக வன்னியரசுவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல். கட்சியின் ஷாஜகானும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து இப்போது தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று தெரிவித்துள்ளார்.
Read more: பாஜக எப்போது ஆட்சியை இழக்கும்? Axis My India நிறுவனர் பிரதீப் குப்தாவின் கணிப்பு இதுதான்..!



