கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் இரண்டாவது இடத்தை பிடித்தார். தேர்தல் முடிவில் திருப்தியடையாத நிலையில், வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார்.
ஸ்டாலின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த சரிபார்ப்பின்போது தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்ததாக ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, வி.எஸ். பாபுவை வெற்றி பெற்றவராக அறிவித்த தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் நேற்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த கோரிக்கையை பரிசீலித்தது. எனினும், அவசர விசாரணைக்கு அனுமதி வழங்காத நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான முறையில் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
Also Read: “உன்னாலதாண்டா எங்க அக்கா செத்தா!” அக்காவின் கள்ளக்காதலனை கொடூரமாக கொலை செய்த சகோதரன்…



